கண்ணுவ முனிவருக்கும், தேவர்களுக்கும் சிவபெருமான் கடம்ப மரத்தில் தோன்றிக் காட்சி கொடுத்த தலம். அதனால் இத்தலம் 'கடம்பந்துறை' என்று பெயர் பெற்றது.
இத்தலத்து மூலவர் 'கடம்பவனேஸ்வரர்' சிறிய லிங்க வடிவத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் வடக்கு நோக்கி காட்சியளிக்கின்றார். சுவாமி பெரும்பாலான தலங்களில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே காட்சி தருவார். இத்தலத்தில் வடக்கு நோக்கி வாமதேவ முகமாகக் காட்சித் தருகின்றார். அது மட்டுமல்லாமல் மூலவரின் பின்புறம் சப்த கன்னியர்கள் இருக்கின்றனர்.
தூம்ரலோசனன் என்னும் அசுரனை அழித்து சிவபெருமான் சப்த கன்னியர்களைக் காத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவர்களுக்குப் பாதுகாவலாக சிவபெருமான் இருப்பதாக ஐதீகம். சுவாமி வடக்கு நோக்கிக் காட்சித் தருவதால், சுவாமிக்கு நேர் பின்புறம் உள்ள சப்த கன்னியரில் ஒருவரான சாமுண்டியை துர்க்கையாக மக்கள் வழிபடுகின்றனர். அதனால் இக்கோயிலில் துர்க்கை சன்னதி இல்லை. அம்பிகை 'முற்றிலா முலையம்மை' என்னும் திருநாமத்துடனும், வடமொழியில் 'பால குஜாம்பிகை' என்னும் திருநாமத்துடனும் வணங்கப்படுகின்றாள்.
காலைக் கடம்பர், மதியம் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்று ஓர் பழமொழி உண்டு. அதாவது ஒரே நாளில் மூன்று வேளைகளில் குளித்தலை, திருவாட்போக்கி, திருஈங்கோய்மலை ஆகிய இம்மூன்று தலங்களையும் தரிசிக்க வேண்டும் என்று கூறுவர். இம்மூன்று தலங்களும் தேவாரப் பாடல் பெற்றத் தலங்கள். இவை ஒன்றுக்கொன்று சில கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.
இத்தலத்து சிவபெருமானை முருகப் பெருமான் வழிபட்டுள்ளார். மகாவிஷ்ணு, பிரம்மா, அகத்தியர், சப்த கன்னியர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் போற்றிப் வணங்கியுள்ளார்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|